EDUCATION

நீட் தேர்வில் பெரியளவில் குளறுபடிகள் நடைபெறவில்ல

நீட் தேர்வு நீட் தேர்வில் பெரியளவில் குளறுபடிகள் நடைபெறவில்லை என்பது சென்னை ஐ.ஐடி. குழு ஆய்வில் தெரியவந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட புகார்கள் புயலை கிளப்பியதை தொடர்ந்து, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன. அண்மையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, வினாத்தாள் கசிந்தது குறித்து விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் இரண்டு பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளார். அதில், 67 மாணவர்கள் 720-க்கு 720 என்ற முழு மதிப்பெண்களைப் பெற்றதற்கு, 25 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டது தான் முக்கிய காரணம் எனவும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் முதல் 100 பேர், வெவ்வேறு இடங்களில் உள்ள 95 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. பிகார் மாநிலம் பாட்னாவில், வினாத்தாளின் நகல் எடுத்து சிலர் பரப்பியதாகவும், இதில் பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், குஜராத் மாநிலம் கோத்ராவில் OMR தாள் முறைகேடுகள் தேர்வுக்கு முன்பாகவே தடுக்கப்பட்டதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. பல்வேறு மையங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக 13 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு ஆண்டில் 153 முறைகேடு புகார்கள் பதிவாகி இருப்பதாகவும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. இதன் அடிப்படையில் நடந்த விசாரணைக்குப் பிறகு, 81 மாணவர்களின் முடிவுகளை நிறுத்திவைக்கவும், 54 மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தடை விதிக்கவும், 9 மாணவர்களின் முடிவுகளை வெளியிடவும் விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நீட் வினாத்தாள் ‘டெலிகிராம்’ செயலியிலோ அல்லது தேர்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்போதோ வெளியாகவில்லை என்றும் தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது. இதேபோன்று நீட் தேர்வு முடிவுகளை ஆய்வு செய்த சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்கள் அடங்கிய குழு அளித்த தகவலின் அடிப்படையில், மத்தியக் கல்வி அமைச்சகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையும் படிக்க: இருமொழிக் கொள்கை… நீட் தேர்வு ரத்து… மாநில கல்விக் கொள்கை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் அதில், நீட் பயிற்சி மையங்கள் அதிகம் உள்ள ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்களில் மாணவர்கள் ரேங்க் பட்டியலில் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பெரியளவில் குளறுபடிகள் நடைபெறவில்லை என்பது சென்னை ஐ.ஐடி. குழு ஆய்வில் தெரியவந்திருப்பதாகவும், ஆதாரமற்ற அச்சங்கள் அடிப்படையில் நீட் மறு தேர்வு தேவையில்லை என்றும் மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. ஜூலை மூன்றாவது வாரத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெறும் என்றும் விசாரணையில் கூடுதல் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தால் கலந்தாய்வு நடைபெற்று கொண்டிருந்தாலும் அவர்களின் முடிவுகள் ரத்து செய்யப்படும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.