NATIONAL

Mumbai Boat Crash | மகாராஷ்டிராவில் 13 பேர் உயிரிழந்த சுற்றுலாப் படகு விபத்து: எப்படி நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சுற்றுலாப் படகு விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை இந்தியா கேட் பகுதியில் இருந்து 110 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் சொகுசுப் படகு ஒன்று நேற்று மாலை 3.30 மணியளவில் எலிபெண்டா தீவு நோக்கி சென்று கொண்டிருந்தது. சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவு பயணித்த நிலையில், சிறிய ரக படகு ஒன்று சொகுசு படகு மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த சேதமடைந்த சொகுசுப் படகு நீரில் மூழ்க ஆரம்பித்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறிய ரக படகும் பலத்த சேதமடைந்தது. தகவலறிந்து வந்த கடற்படை, கடலோர காவல்படை, துறைமுக ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் களமிறக்கப்பட்டன. இதில், 10 க்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்டனர். 101 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சிலர் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காணாமல் போன சிலரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. சொகுசுப் படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கு என்ன காரணம்? இதற்கிடையே, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு படகு மூழ்கியதற்கு கடற்படை ரோந்துப் படகு மோதியதே காரணம் என தெரியவந்துள்ளது. மும்பையில் நிகழ்ந்த படகு விபத்து குறித்து இந்திய கடற்படை விளக்கமளித்துள்ளது. அதில், கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் புதிதாக இன்ஜின் பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த படகில் கடற்படையினர் மற்றும் இன்ஜின் தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் பயணித்ததும், அப்போது இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறால் கட்டுப்பாட்டை இழந்து சொகுசு படகு மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் விளக்கமளித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை மற்றும் கடற்படை சார்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மும்பை படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.