TAMIL-NADU

ஓபிஎஸ், சசிகலா மீண்டும் இணைப்பா? - ஈபிஎஸ் சொன்னது என்ன?

அதிமுக ஆலோசனை கூட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையை தொடங்கியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளின் வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்மகன் உசேன், கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தேர்தலில் கூட்டணி பலமாக இல்லாததே தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறியுள்ளனர். மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் போன்ற திமுக அரசின் திட்டங்களால் அதிமுக-விற்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதையும் படிக்க: 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணியா? - அதிமுக கூட்டத்தில் முக்கிய முடிவு! கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் சேர்த்துவிட வேண்டாம் என்று சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும், தற்போது இருக்கும் நிலையே தொடரட்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ தனபால் கூறியதாகவும் தெரிகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி அமைதியாகக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இறுதியாக பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சியில் பிரச்சனை உள்ள இடங்களை கண்டறிந்து அதனை சரிசெய்யும்படி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும், இளைஞர்களுக்கு அதிகளவு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் எனவும், 2026 தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஆறு முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்திய நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையும் படிக்க: என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல எடப்பாடி யார்? - கொந்தளித்த ஓபிஎஸ் இது குறித்து நேற்று நடந்த கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை. எனினும், தென் மாவட்டங்களில் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளதால் 2026 தேர்தல் வரை இந்த கோரிக்கை எதிரொலிக்கும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியப்படுமா ? அதற்கான திரைமறைவு பேச்சுக்கள் நடைபெறுகிறதா ? என்பதை வரும் நாட்கள் தெளிவுபடுத்தும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.