INTERNATIONAL

Syria's Hayat Tahrir al-Sham | சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர்: யார் இந்த ஆயுதக்குழுக்கள்?

சிரியா அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஆயுதக்குழு, அந்நாட்டில் அதிபர் ஆட்சி கவிழ முக்கிய காரணமாக மாறி உள்ளது. யார் இந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம்? விரிவாக பார்க்கலாம். சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆயுதக்குழு, உள்ளூர் கிளார்ச்சியாளர்கள் குழு, துருக்கிய ஆதரவு சிரிய கிளர்ச்சியாளர்கள், குர்திஷ் தலைமையிலான ஆயுதக்குழு என பல பிரிவுகள், பல ஆண்டுகளாக ஆளும் பஷர் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தன. இப்படிப்பட்ட நிலையில், நவம்பர் இறுதியில் அரசுக்கு எதிராக Aleppo உள்ளிட்ட இடங்களில் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஆயுதக்குழு திடீர் தாக்குதல் நடத்தி பல பகுதிகளை கைப்பற்றியது. இது, மற்ற ஆயுதக் குழுக்களுக்கு பாதை அமைத்து தர, தலைநகர் டமாஸ்கஸ் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஆயுதக்குழுவை பொறுத்தவரை, சிரியாவில் பஷர் அல் அசாத் அரசுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சி வெடித்த போது அல் கொய்தாவின் துணை அமைப்பாக உருவாக்கப்பட்டது. ஜபத் அல் நுஸ்ரா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை அல்கொய்தாவின் ராணுவ தளபதி அபு முகமது அல்-ஜவ்லானி கட்டமைத்து இயக்கி வந்தார். இதில், ஐஎஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அபு பக்கர் அல்-பாக்தாதியும் முக்கிய பங்காற்றினார். அதிபர் ஆசாத்துக்கு எதிராக உருவான ஆயுதக்குழுக்களில் இது மிகவும் வீரியத்துடன் செயல்பட்ட குழுவாக பார்க்கப்பட்டது. காலப்போக்கில், ஐஎஸ்ஐஎஸ்ஸின் தலையீடு காரணமாக, சுதந்திர சிரியா என்ற ஆயுதக்குழுக்களின் ஒற்றை கோரிக்கையில் இருந்து ஜபத் அல் நுஸ்ரா அந்நியப்பட தொடங்கியது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அடிப்படைவாத இஸ்லாமிய அரசை நிறுவ வேண்டும் என்ற ஜிஹாதி சித்தாந்தத்தை நிலை நிறுத்துவதில் தனது கவனத்தை செலுத்த தொடங்கியது. அதன் நீட்சியாக, அபு முகமது அல்-ஜவ்லானி, 2016 ஆம் ஆண்டில் ஜபத் அல் நுஸ்ரா அமைப்பை கலைத்தார். அல் கொய்தா அமைப்பிடம் இருந்தும் பிரிந்து ஒரு புதிய அமைப்பை நிறுவினார். இதை வரவேற்று, ஒத்த கருத்துக்கொண்ட சிரியாவின் பிற ஆயுதக்குழுக்கள் இணைந்தபோது ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற தற்போதுள்ள அமைப்பு உருவானது. சிரியாவின் Idlib நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் கீழ் சுமார் 10 ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அரசுடன் மட்டுமின்றி சில ஆயுதக்குழுக்களுடனும் அவ்வப்போது ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் அமைப்புக்கு உரசல்கள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதையும் படிங்க : சிரியாவில் வெடித்த கிளர்ச்சி… அதிபரின் விமானம் மாயம் - என்ன தான் நடக்கிறது? இதனால், இந்த அமைப்பின் லட்சியம் என்ன என்பது தெளிவாக தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருவதாக ஐநா, அமெரிக்கா, துருக்கி மற்றும் பிற நாடுகளால் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிரியாவில் உள்நாட்டு போரை பெரிய அளவில் மீண்டும் தொடங்கி வைத்துள்ள இந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஆயுதக்குழு, கிட்டத்தட்ட மிகப்பெரிய அரபு புரட்சிக்கு அடித்தளம் இட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.