INTERNATIONAL

ஓராண்டாக நீடிக்கும் போர்! காசா முதல் ஈரான் வரை இஸ்ரேலின் தாக்குதல்!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா, ஈரான் ராணுவம் ஆகியவையும் பதில் தாக்குதல் நடத்துகின்றன. ஏவுகணைத் தாக்குதல், பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடிப்பு என ஓராண்டாக நீடிக்கும் சண்டையின் அடுத்தடுத்த நிகழ்வுகளை சற்று திரும்பிப் பார்ப்போம். இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் பாலஸ்தீனம் பகுதி இருந்த நிலையில், பொதுமக்களின் புரட்சியைத் தொடர்ந்து, காசா மற்றும் மேற்கு கரையிலிருந்து 2005-ஆம் ஆண்டில் இஸ்ரேல் பின்வாங்கியது. காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு, தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நூற்றுக்கணக்கான ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவினர். இதில், பொதுமக்கள் உள்ளிட்ட 1,205 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் ஒழிக்கப்படுவார்கள் என சூளுரைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டார். வடக்கு காசாவில் உள்ள மக்கள், தெற்கு காசாவை நோக்கி செல்லுமாறு அக்டோபர் 13-இல் இஸ்ரேல் அறிவுறுத்தியது. 24 லட்சம் பேர் இடம்பெயர்ந்த நிலையில், அக்டோபர் 27-இல் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. காசாவின் மிகப்பெரும் மருத்துவமனையான அல்-ஷிபாவை தனது கட்டுப்பாட்டு மையமாக ஹமாஸ் வைத்திருப்பதாகக் கூறி, அதன் மீது நவம்பர் 15-இல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு தரப்புக்கும் இடையே நவம்பர் 24 முதல் ஒரு வார கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. எகிப்து வழியாக காசாவுக்குள் நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் அனுமதித்த நிலையிலும், மனிதநேய சூழல் மோசமாகவே இருந்தது. தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல், தெற்கு காசாவுக்குள்ளும் சென்றது. ஏப்ரல் ஒன்றாம் தேதி, அமெரிக்க தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 7 பணியாளர்கள், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனர். சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஏப்ரல் 13-இல் இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபா நகரில் தனது தாக்குதலை மே 7-இல் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டது. எகிப்து எல்லைப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், முகாம்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் ஜூலை 13-இல் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் படைப் பிரிவு தலைவர் முகம்மது தெய்ஃப் கொல்லப்பட்டார். காசாவுக்கு ஆதரவாக செங்கடலில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஏமன் மீது ஜூலை 20-இல் இஸ்ரேல் படையினர் தாக்குதல் மேற்கொண்டனர். அது ஒருபுறமிருக்க இஸ்ரேல் - லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஈரான் ஆதரவுபெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நாள்தோறும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. ஜூலை 30-ல் இஸ்ரேல் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த கமாண்டர் ஃபுவாத் சுக்குர் கொல்லப்பட்டார். இதற்கு அடுத்த நாளில் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே உயிரிழந்தார். லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது பெரும் தாக்குதலை நடத்தியதாக ஆகஸ்ட் 25-இல் இஸ்ரேல் அறிவித்தது. அதேநேரம், இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. இந்த சூழலில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், கடந்த மாதம் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் அடுத்தடுத்து வெடித்தன. இதில், 39 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 3 ஆயிரம் பேர் காயமடைந்தனர். செப்டம்பர் 27-இல் தெற்கு பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா, ஈரானின் துணை ராணுவமான புரட்சிகரப் படைத் தலைவர் அப்பாஸ் நில்ஃபோருஷன் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், லெபனானில் தரைவழித் தாக்குதலை கடந்த ஒன்றாம் தேதி இஸ்ரேல் ராணுவம் தொடங்கியது. இதனிடையே, நஸ்ரல்லா கொலைக்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் தலைவர் அயதுல்லா கமேனி எச்சரிக்கை விடுத்தார். இதன்படி, இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி கடந்த ஒன்றாம் தேதி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. ஓராண்டாக நீடிக்கும் போரில், காசா பகுதியில் 41,700-க்கு மேற்பட்டோரும், லெபனானில் 1,900-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.