TAMIL

சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா?

Delhi Latest News In Tamil: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவை தேர்தலுக்காக மட்டும் சில நாள்கள் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் நிறைவடைந்ததும் அவர் மீண்டும் சிறை சென்றார். அமலாக்கத்துறையுடன் அவரை சிபிஐயுடம் கைது செய்திருக்கிறது. இவர் மட்டுமின்றி தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஜாமினில் வெளிவந்திருக்கும் நிலையில், மற்றவர்களும் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த சிபிஐ முனைப்பு காட்டி வருகிறது. பரபரப்பாகும் டெல்லி அரசியல் களம் டெல்லியில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பதால், ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும் (இந்தியா கூட்டணி), ஆட்சியை பிடிக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருவதால் அங்கு நடக்கும் ஒவ்வொரு அரசியல் தொடர்பான நிகழ்வுகளும் தேசியளவில் கவனம் பெறும் எனலாம். நடைபெற்ற மக்களவை தேர்தலில் டெல்லியின் 7 தொகுதியையும் பாஜக கைப்பற்றியிருந்தது. இதை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலும் நெருங்குவதால் அங்கு அரசியல் களமும் சூடுபிடித்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் முதலமைச்சராகவே தொடர்வதால், ஆட்சிக்கும் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | 78வது சுதந்திர தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்..! அந்த வகையில், தற்போது 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி அரசு சார்பில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் என்ற விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக முதலமைச்சராக இருப்பவர் கொடியேற்றுவார், அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருக்கும் சூழலில் அவருக்கு பதில் யார் கொடியேற்றும் அதிகாரத்தை பெறுவார்கள் என பலராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. கொடியேற்றப்போவது யார்? அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இதுதொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எழுதிய கடிதத்தில், சுதந்திர தினத்தன்று மாநில அரசு சார்பில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கொடியை ஏற்றும் அதிகாரத்தை கல்வித்துறை அமைச்சர் அதிஷி மர்லினாவுக்கு அளிக்கும்படி தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக துணைநிலை ஆளுநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா தரப்பில் வெளியான கடிதத்தில்,"சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பின் நடைபெறும் சம்பிரதாய அணிவகுப்பை டெல்லி காவல்துறையினரே மேற்கொள்வார்கள். காவல்துறை தொடர்பான விவகாரங்கள் உள்துறைக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேற்கூறியதை கருத்தில் கொண்டு, மாநில அளவிலான சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு உள்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட்டை நியமிப்பதில் துணைநிலை ஆளுநர் மகிழ்ச்சி அடைகிறார்..." என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வரின் கடிதம் செல்லவில்லை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தாலும், அதுதொடர்பாக எவ்வித கடிதத்தையும் பெறவில்லை என துணைநிலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம் டெல்லி சிறை விதிகளின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை துஷ்பிரயோகம் செய்வதாக உள்ளது என்றனர். இதனால் அந்த கடிதம் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற அனுமதிக்கப்படாத செயல்களை இனி செய்யக்கூடாது எனவும், இதை தொடர்ந்து சிறையில் வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆம் ஆத்மி vs துணைநிலை ஆளுநர் துணைநிலை ஆளுநருக்கு கீழ் இயங்கும் டெல்லியின் பொது நிர்வாகத் துறை இதுகுறித்து கூறுகையில், ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முதலமைச்சருக்கு அதிகாரமில்லை என்றது. தற்போது விவகாரத்தால் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாக்கும் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான மோதல் போக்கு தற்போது தீவிரமாகி உள்ளது. அதிலும் குறிப்பாக, மணீஷ் சிசோடியா துணைநிலை ஆளுநரை நோக்கி எழுப்பிய கேள்வியில்,"குற்றவாளியாக சிறையில் இருக்கும் ஒருவர் (சுகேஷ் சந்திரசேகர்) எழுதும் கடிதத்தை துணைநிலை ஆளுநருக்கும் அளிக்கும் சிறைத்துறை அதிகாரிகள், முதலமைச்சர் எழுதிய கடிதத்தை மட்டும் அனுப்பாதது ஏன்?" எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் படிக்க | சுனிதா பூமி திரும்ப முடியாதா? கலக்கத்தில் நாசா! விண்வெளியில் திக் திக்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.