TAMIL

உண்மை சம்பவங்களை தழுவி தயாரான கெவி... நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள 'வெள்ளக்கெவி' கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஆதவன் அறிமுகமாகிறார். ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர். சமீபத்தில் இப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதி இசையமைப்பாளர் தேவா பாடிய ‘மலைவாழ் மக்கள் கீதம்’ (Hill Anthem) ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீஸை நோக்கி படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன,. இந்த நிலையில் படத்தின் நாயகன் ஆதவன் இந்தப் படத்தில் தான் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படிக்க | Movies releasing in September: செப்டம்பரில் வெளியாகவிருக்கும் மாஸ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ.. “சிறுவயதிலேயே படங்கள் பார்க்கும்போது அதில் வரும் கதாபாத்திரங்களாக என்னை நானே கற்பனை செய்து கொள்வேன். அதனால் சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தபோது கூட நடிப்புக்கென எங்கேயும் சென்று பயிற்சி பெறாமல் படங்களைப் பார்த்தே நடிப்பைக் கற்றுக்கொண்டேன். படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு ஒரு பக்கம் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டே இன்னொரு பக்கம் ஆட்டோ, கார் என ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் 'மெஹந்தி சர்க்கஸ்' பட தயாரிப்பாளர் மூலமாக சினிமாவிற்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு அப்படியே ஒரு நண்பர்கள் கூட்டம் உருவானது. பின் அனைவரும் ஒன்று சேர்ந்து குறும்படம் ஒன்றை உருவாக்கி நாளைய இயக்குநர் போட்டியில் பங்கேற்றோம். அதன்பின் ஒரு முழு நீள படம் தயாரிக்கும் எண்ணம் உருவானது. சில பல முயற்சிகளுக்கு பிறகு நாங்களே படம் தயாரிப்பது என முடிவுக்கு வந்தோம். அப்படி ஒரு கதையை உருவாக்கி விட்டு அதற்கான லொக்கேஷன் தேடுவதற்காக கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தேர்வு செய்தோம். போக்குவரத்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த கிராமம் எங்களுக்கு பொருத்தமாக இருந்ததுடன் அந்த கிராமத்தில் நாங்கள் உருவாக்கி வைத்திருந்த கதை போன்றே நடந்த நிஜ சம்பவங்களும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் கூட ஒருவர் உடல் நலக் குறைவால் இறந்து போனது மிக வருத்தமான செய்தி. எங்கள் படம் போன்றே நடந்திருக்கிறது. யூனிட்டே வருத்தமானோம். 'கெவி' படத்தில் மலைக் கிராமத்தில் வசிக்கும், எந்தப் பிரச்சனைக்கும் போகாத ஒரு சாதாரண இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் அந்த கிராமத்திற்கு அவனால் ஒரு பிரச்சனை வந்த போது அதை சமாளிக்க முடிந்ததா? என்பது போல எனது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் எனது தலை முடியையும் தாடியையும் வெட்டாமல் வளர்த்தேன். இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் இந்த படம் தொடங்கப்பட்ட சமயத்தில் எனது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்திருந்த சமயத்தில் சில காரணங்களால் படப்பிடிப்பு காலம் நீண்டு கொண்டே போனது. எனது மற்றும் மனைவி குடும்பத்தினர் என் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஆதரவளித்தனர். என்னுடைய தாடியை எடுக்காமலேயே திருமணம் நடைபெற்றது. அந்த அளவிற்கு இந்த படத்தின் மீது எங்கள் குழுவினர் வெகுவாக நம்பிக்கை வைத்துள்ளோம். கிட்டத்தட்ட 110 நாட்கள் வெள்ளக்கெவி பகுதியில் கோடை காலம், குளிர் காலம் என இரண்டு சீதோஷ்ண நிலையிலும் படப்பிடிப்பு நடத்தினோம். அதிலும் கோடைகாலத்தில் இந்தப் பகுதியில் தண்ணீரே கிடைக்காது. அது மட்டுமல்ல நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதியில் எங்களுக்கு வேண்டிய உணவை நாங்களே தயாரித்து தான் கீழே இருந்து மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்வோம். படப்பிடிப்பு துவங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே நான் இந்தப் பகுதிக்கு வந்து இங்குள்ள மக்களுடனேயே வாழ ஆரம்பித்து விட்டேன். படத்தில் முதல் 20 நிமிடம் தான் நான் முழு ஆடையுடன் வருவேன். அதன் பிறகு மீதி படம் முழுவதும் ஒரு காக்கி டவுசர் மட்டுமே எனது உடையாக இருக்கும். இந்த உடையுடன் குளிர்காலத்தில் வனப்பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பில் உடலெங்கும் சேரும் சகதியுமாக பூசிக்கொண்டு நடித்தது மிகக் கடினமான விஷயமாகவே இருந்தது. சண்டைக் காட்சியின் போது ஒரு முறை நெருப்பில் அடித்தபோது காலில் காயம் ஏற்பட்டு அதனால் பல நாட்கள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு சில சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது அது நிஜமாக இருக்க வேண்டும் அதேசமயத்தில், சிறிது சுணங்கினாலும் அக்காட்சியை மீண்டும் படமாக்க நேரும். அது அனைவருக்கும் சிரமம் என்பதால் அடியின் வலியைத் தாங்கிக் கொண்டு நடித்தேன். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மலை உச்சியில் கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் படமாக்கப்பட்டது. அங்கே எளிதாக சாப்பாடு கொண்டு செல்ல முடியாததால் ஒரு கேன் தண்ணீரை வைத்துக் கொண்டு சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம். இவ்வளவு கடினமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்த வேண்டுமா? என பலரும் கேட்டனர். ஆனால் படம் ரியலிஸ்டிக்காக ஆக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு சிரமங்களையும் நாங்கள் எதிர்கொண்டோம். அதுமட்டுமல்ல, மலைவாழ் மக்களின் வலியைச் சொல்வதற்கு அந்த வலியை நாங்களும் தாங்கிக்கொண்டு பணியாற்றுவது அவசியமாக இருந்தது. படத்தில் சினிமா நடிகர்கள் என கணக்கிட்டால் நாங்கள் வெறும் ஆறு பேர் மட்டும் தான். மற்றபடி அந்தப் பகுதி மக்கள்தான் இப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் நாயகியான ஷீலா நாற்பது நாட்களுக்கும் மேல் வெயிலிலும் குளிரிலும் மெனக்கிட்டு நடித்தார். நாங்கள் சமாளித்துவிடலாம். ஆனால் ஊசிக் குத்தும் குளிரில் நடித்தார். இன்னொரு நாயகியான விஜய் டிவி ஜாக்குலினும் குளிரை சமாளித்து பேருதவியாக நின்று நடித்துக் கொடுத்தார். அதேபோன்று 'தர்மதுரை' ஜீவா அக்காவும் முழுமையாக அர்ப்பணித்து நடித்தார். நான் மட்டுமல்ல ..ஒட்டுமொத்த குழுவும் இல்லையென்றால் இந்தப் படம் சாத்தியமே இல்லை. இயக்குநர் தமிழ் தயாளனுக்கும் ஒளிப்பதிவு செய்த ஜெகனுக்கும் என் நன்றிகள். நாங்கள் நண்பர்கள்தான். ஆனால் படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் எல்லா வலியையும் தாங்கத் தயாராகிவிடுவோம். எல்லா சுமைகளையும் சேர்ந்து சுமப்போம். நண்பர்கள் தோள் கொடுத்து உருவான படம் இது. தங்குவதற்கு என எந்த ஒரு வீடும் கிடைக்காததால் தனியாக டென்ட் அடித்து தங்கினோம். இதுதான் கதாநாயகிகளுக்கு நாங்கள் செய்து கொடுத்த அதிகபட்ச வசதி. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்குவதற்கு முன்பாக மிகப்பெரிய புயல் ஒன்று வீசியது. அந்த பேராபத்திலிருந்தும் தெய்வாதீனமாக தப்பித்தோம். இந்த படத்தில் நடித்த காலக்கட்டத்தில் எனக்கு மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் இந்தப் படத்தை முடித்துவிட்டுத் தான் அடுத்த படத்தில் நடிப்பது என உறுதியாக இருந்துவிட்டேன். இப்போது படம் பார்த்தபோது அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் என்கிற மனநிறைவு இருக்கிறது”. "கமல் சார், விக்ரம் சார், 'நான் கடவுள்' படத்திற்காக ஆர்யா சாரெல்லாம் கஷ்டப்பட்டதைவிட நானொன்றும் பெரிதாக கஷ்டப்படவில்லையென்றாலும் அவர்களின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் மனதில் வைத்துக்கொண்டு நடித்தேன். அதில் ஒரு துளி அளவிற்குக் கூட நாம் நம் படத்திற்காக உழைக்கவில்லையென்றால் எப்படி? என்கிறார் ஆதவன், தன்மையாக!! மேலும் படிக்க | Yuvan Shankar Raja: என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும் - யுவன் சங்கர் ராஜா! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.