TAMIL

FBI தலைவராகும் இந்திய வம்சாவளி நபர்... டிரம்ப் போட்ட சரவெடி - யார் இந்த காஷ்யப் பட்டேல்?

Kashyap Patel Nominated As FBI Head: உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மக்களால் வாக்களித்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 2016 - 2020 காலகட்டத்திலும் அமெரிக்காவின் அதிபராக இருந்தார். அதற்கடுத்து, 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த இவர் மூன்றாவது முறையாக 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியை கைப்பற்றினார். மொத்தம் உள்ள 538 வாக்காளர்கள் குழுவில், டிரம்ப் 312 மற்றும் ஹாரிஸ் 226 இடங்களை கைப்பற்றினர். பெரும்பான்மையை நிரூபிக்க 270 இடங்களை ஒருவர் வென்றிருக்க வேண்டும் என்பதால் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் இந்த காஷ்யப் பட்டேல்? இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் ஃபெடரல் புலனாய்வு செயலகத்தின் (எஃப்பிஐ - FBI) தலைவராக தனது ஆதரவாளரான காஷ்யப் 'காஷ்' பட்டேலை (Kashyap Kash Patel) நியமித்து உத்தரவிட்டுள்ளார். FBI என்பது அமெரிக்காவின் உயரிய விசாரணை அமைப்பாகும். அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான காஷ்யப் பட்டேல் என்பவரை நியமித்திருப்பதன் மூலம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் டொனால்ட் டிரம்ப் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த வகையில், யார் இந்த காஷ்யப் பட்டேல் என்பதை இங்கு விரிவாக காணலாம். மேலும் படிக்க | ஒரே நாளில் சரிந்த அதானி சாம்ராஜ்யம்... அமெரிக்காவில் வழக்கு ஏன்? குற்றச்சாட்டுகள் என்னென்ன? 1980ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குஜராத்தி தம்பதியருக்கு பிறந்தவர்தான் காஷ்யப் பட்டேல். இவரின் பெற்றோர் குஜராத்தியர்கள் என்றாலும் அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் வளர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் நீண்டகாலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என தெரிகிறது. காஷ்யப் பட்டேல் நியூயார்க் நகரின் Long Island பகுதியில் கார்டன் சிட்டி உயர்நிலைப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள சர்வதேச சட்டம் குறித்த சான்றிதழ் படிப்பை நிறைவு செய்த அவர் நியூயார்க்கில் சட்டப்படிப்பில் பட்டமும் பெற்றார். இந்து மதத்தை பின்பற்றும் இவர் தொடர்ந்து இந்தியா உடன் ஆழமான தொடர்பில் இருக்கிறார் எனலாம். முந்தைய டிரம்ப் ஆட்சியில் காஷ்யப் பட்டேல்... ஆரம்ப கட்டத்தில் பொதுநல வழக்கறிஞராக இருந்த காஷ்யப் பட்டேல், அடுத்தடுத்து கொலை குற்றம் முதல் போதைப்பொருள் கடத்தல், சிக்கலான பொருளாதார குற்றங்கள் ஆகியவற்றுக்கு ஆஜராக தொடங்கினார். அமெரிக்காவின் பாதுகாப்பு செயலராக இருந்த கிறிஸ்டோபர் மில்லரின் முன்னாள் தலைமைத் தளபதியாக காஷ்யப் பட்டேல் பணியாற்றினார். மேலும் படிக்க | அணுகுண்டை பயன்படுத்தப் போகிறதா ரஷ்யா? ஒப்புதல் அளித்த புதின் - பதற்றத்தில் உலக நாடுகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு வாரியத்தின் (NSC) பயங்கரவாத எதிர்ப்பு படையின் மூத்த இயக்குநராக மட்டுமின்றி காஷ்யப் பட்டேல் அதிபரி துணை உதவியாளராகவும் பணியாற்றி இருக்கிறார். டொனால்ட் டிரம்ப் இதற்கு முன் அதிபராக பதவிவகித்த காலகட்டத்தில், காஷ்யப் பட்டேல் பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் திட்டத்தை மேற்பார்வையிட்டார். குறிப்பாக, ஐஎஸ்ஐஎஸ் மற்ரும் அல்-கெய்தா போன்ற பயங்கரவாத குழுக்களின் தலைவர்களின் ஒழிப்பது மற்றும் பயங்கராவதிகளிடம் சிக்கிய ஏராளமான அமெரிக்க பணயக்கைதிகளை பத்திரமாக மீட்பது போன்ற பணிகளையும் இவர் மேற்பார்வையிட்டார். காஷ்யப் பட்டேலை சுற்றும் சர்ச்சைகள் டிரம்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில் காஷ்யப் பட்டேல் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் சர்ச்சைக்குரிய நபராக உருவெடுத்தார். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற ரஷ்யா உதவியாக எழுந்த குற்றச்சாட்டினை FBI விசாரித்தது. அந்த வகையில், குடியரசுக் கட்சியினரின் விசாரணைக்கு தலைமை தாங்குவதில் காஷ்யப் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார். மேலும், முன்னாள் வெள்ளை மாளிகையின் முன்னாள் புலனாய்வுக் குழுத் தலைவர் டெவின் நூன்ஸின் உதவியாளராக காஷ்யப் பட்டேல் இருந்தார். டொனால்ட் டிரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டில் FBI விசாரணையின் போது, ​​முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி ஃபியோனா ஹில், பட்டேல் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்தார். ட்ரம்ப்புக்கும் உக்ரைனுக்கும் இடையில் அனுமதியின்றி ரகசிய புள்ளியாக காஷ்யப் பட்டேல் செயல்படுகிறார் என தனக்கு தோன்றுவதாக ஹில் FBI-யிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை காஷ்யப் பட்டேல் நிராகரித்தார். காஷ்யப் படேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், புலனாய்வுக்கான ஹவுஸ் நிரந்தர தேர்வுக் குழுவின் (HPSCI) மூத்த வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக, டொனால்ட் டிரம்ப் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 2021 மாதத்தில் அதிபர் பதவியில் இருந்து விலகிய பின், டிரம்ப் தனது அதிபர் பதிவுகளை அணுகுவதற்கு நியமித்த பிரதிநிதிகளில் காஷ்யப் பட்டேலும் ஒருவர் எனலாம். மேலும் படிக்க | டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையலாம்... ஆனால்... SBI கூறும் முக்கிய தகவல் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.