TAMIL

மூத்த குடிமக்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை - அதிரடி அறிவிப்பு!

National News Latest Updates: டெல்லி சட்டப்பேரவை வரும் 2025ஆம் ஆண்டு (Delhi Assembly Election 2025) பிப்ரவரி மாதத்துடன் காலவதியாகும் நிலையில், அதற்கு முன் தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் முன்னரே தற்போது ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. இந்த முறையும் டெல்லியில் காங்கிரஸ் உடன் ஆம் ஆத்மி கைக்கோர்க்கவில்லை. ஆம் ஆத்மி - பாஜக - காங்கிரஸ் என மும்முனை போட்டியாக இருந்தாலும் ஆம் ஆத்மி - பாஜக இடையேதான் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) வரும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வேன் என்ற வைராக்கியத்துடன் உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமின்றி தற்போதைய முதலமைச்சர் அதிஷி மெர்லினா, முன்னாள் துணை முதல்வரான மனீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். கடந்த முறை 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சஞ்சீவினி திட்டம் இந்நிலையில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் களத்தில் பம்பரமாக செயலாற்றி வரும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இங்கு உள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு சஞ்சீவினி திட்டம் என்றும் அவர் பெயர் சூட்டியுள்ளார். மேலும் படிக்க | அம்பேத்கர் குறித்த சர்ச்சை! முடங்கிய அவை.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் இதுகுறித்து அவர் நேற்று (டிச. 18) பேசுகையில்,"முதிய வயதில் அனைவருக்கும் ஒரு விஷயம் பிரச்னையாக இருக்கும். வயது அதிகமாக அவர்களை தாக்கும் நோயும் அதிகமாகும். அதற்கு எப்படி சிகிச்சை பெறுவது என்பதுதான் அவர்களுக்கு பெரிய கவலையாக இருக்கும். பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களும், தங்களின் பிள்ளைகளின் சரியான பாரமரிப்பு இல்லாமல் அவதிப்படுவதை நான் பார்த்துள்ளேன். ஆனால் இனி அதை பற்றி கவலைப்படாதீர்கள் உங்களின் மகன் நான் உயிரோடு இருக்கிறேன். டெல்லியில் உள்ள முதியவர்களுக்கு என சிறப்பு திட்டம் ஒன்றை நான் இன்று (அதாவது நேற்று) அறிவிக்க இருக்கிறேன். அதன் பெயர் சஞ்சீவினி திட்டம் (Sanjeevani Yojana). இந்த திட்டத்தின் கீழ் 60 வயதை தாண்டிய முதியவர்களுக்கு மருத்துவமனையில் இலவச மருத்துவச் சிகிச்சை கிடைக்கும். நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவோம்" என்றார். மேலும் இந்த திட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விரிவாக விளக்கினார். அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை "நீங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் சரி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் சரி, முழு சிகிச்சையும் உங்களுக்கு இலவசம்தான். இதற்கென எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. அனைவருக்கும் சிகிச்சை வழங்கப்படும். நீங்கள் பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி அனைவருக்கும் இலவசம்தான்" என்றார். மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என்றும், ஆம் ஆத்மி தொண்டர்கள் வீட்டுக்கு வீடு சென்று, முதியவர்களிடம் இத்திட்டத்தை எடுத்துக்கூறி அவர்களை விண்ணப்பிக்கச் செய்ய வேண்டும் என்றார். "இன்னும் 2-3 தினங்களில் இத்திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான பணிகள் தொடங்கும். நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. ஆம் ஆத்மி கட்சி பணியாளர்கள் உங்களை தேடி வந்து, உங்களை இந்த திட்டத்தில் பதிவு செய்துகொள்வார்கள். அவர்கள் அதற்கான கார்டை கொடுப்பார்கள், அதை நீங்கள் பத்திரமாக வைத்திருங்கள். தேர்தலுக்கு பிறகு அரசு அமைந்த உடன் உங்களின் இந்த மகன் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றி, முதியவர்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்வேன்" என்றார். மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்ற முக்கிய எம்.பி.க்கள் லிஸ்ட் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.