TAMIL

சிராஜிடம் சண்டை... நான் இதை தான் சொன்னேன் - டிராவிஸ் கொடுத்த விளக்கம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

Travis Head Mohammed Siraj Issue: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை 4-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என குறிக்கோளுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா இல்லாமலேயே இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடக்கத்தை சிறப்பாக அமைத்திருக்கிறது. இனி அடுத்தடுத்த போட்டிகளையும் வென்றால் மட்டுமே தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவால் தகுதிபெற முடியும். அந்த வகையில் பகலிரவு போட்டியாக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மீதும் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இதுவரை தோற்றதே இல்லை. அந்த ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி, இந்தியா உடனான நடப்பு போட்டியிலும் தொடர்ந்து வருகிறது எனலாம். ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு நாள் ஆட்டம் மட்டுமே நிறைவடைந்திருக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்கில் 180 ரன்களை மட்டும் எடுக்க, ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட் அடித்த அதிரடியான 140 ரன்களின் உதவியோடு மொத்தமாக 337 ரன்களை குவித்தது. இதன்மூலம் 157 ரன்கள் என்ற முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. மேலும் படிக்க | Jasprit Bumrah: பும்ராவின் முதல் சர்வதேச விக்கெட் யாருடையது தெரியுமா? கடைசி செஷனில் இந்திய அணி 24 ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்து 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்திருக்கிறது. இன்னும் 29 ரன்கள் பின்தங்கியிருக்கும் நிலையில் கையில் 5 விக்கெட்டுகள் உள்ளன. தற்போது வரை இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது இதுவரை நடந்த 6 செஷன்களிலும் ஆஸ்திரேலியாவே முன்னிலை வகித்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்திய அணியை சிதைத்த டிராவிஸ் ஹெட் ஆனாலும், இந்திய அணி தனது பந்துவீச்சில் ஆட்டத்தை புரட்டிப்போட முயற்சித்த போது, ஒரே ஒரு வீரர் மட்டும் களத்தில் நின்று அதிரடியாக ரன்களை குவித்து இந்தியாவை பெரும் பின்னடைவுக்கு ஆளாக்கினார். அது யார் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. 141 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 140 ரன்களை குவித்த டிராவிஸ் ஹெட்டைதான் சொல்கிறேன். சிராஜ் பக்கம் வந்த கஷ்டமான கேட்ச் ஒன்று, ரிஷப் பண்ட் தவறவிட்ட கேட்ச் ஒன்று என இந்திய அணியின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசவே இல்லை. 140 ரன்களை எடுத்தபோதே, சிராஜ் வீசிய அந்த லோ-புல்டாஸ் பந்தில் ஸ்டம்ப் பறிகொடுத்து டிராவிஸ் ஹெட் பெவிலியன் திரும்பினார். அப்போது டிராவிஸ் ஹெட் - சிராஜ் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது போல் தெரிந்தது. டிராவிஸ் ஹெட் பேசிக்கொண்டிருக்க சிராஜ், 'வெளியே போ' என்பதைப் போல் சைகை காட்டினார். இதனால் கோபமுடன் காணப்பட்ட டிராவிஸ் ஹெட் அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார். டிராவிஸ் ஹெட் - சிராஜ்... என்ன பிரச்னை? இந்நிலையில் ஆடுகளத்தில் சிராஜ் உடன் என்ன பேசுனீர்கள் என போட்டி நிறைவடைந்த உடன் டிராவிஸ் ஹெட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிராவிஸ் ஹெட்,"நான் நன்றாக பந்துவீசினீர்கள் என்றுதான் சொன்னேன், ஆனால் அவர் வேறுவிதமாக நினைத்துக்கொண்டார் போல... அதனால் எனக்கு சற்று அதிருப்தி ஏற்பட்டது. அப்படித்தான் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும் என நினைத்தால் அது அப்படியே இருக்கட்டும்" என்றார். Travis Head has his say after the Mohammed Siraj altercation. #AUSvIND pic.twitter.com/UkKq8gIp8u — Aussies Army (@AussiesArmy) December 7, 2024 சிராஜிற்கு ஆங்கிலப் புலமை சற்று குறைவு என்பதால் ஒருவேளை ஹெட் சொல்லியதை முழுமையாக கேட்காமலோ அல்லது புரியாமலோ ஹெட்டிடம் சீறியிருக்கலாம். இருப்பினும், ஆஸ்திரேலியர்கள் எப்போதுமே எதிரணி வீரர்கள சீண்டக்கூடியவர்கள்தான் என்பதால் டிராவிஸ் ஹெட் சொல்வதையும் நம்ப முடியாது என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஐபிஎல் 2025ல் விளையாடுகிறாரா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.