TAMIL

மெரினா விமான சாகச நிகழ்ச்சி... அவதிப்படும் சென்னை - கடும் வெயிலால் ஒருவர் பலி!

Chennai Air Show: சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்களில் 30க்கும் மேற்பட்டோர், வெயிலின் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் தற்போது 4 பேர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் உயிரிழந்த நபர் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அதேநேரத்தில், 9 பேர் நீர் சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 25 பேர் வீடு திரும்பி விட்டனர். மேலும் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நண்பகல் 11 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை இந்த விமான சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இதனால் காலை 9 மணி முதலே மக்கள் கூட்டம் மெரினாவை நோக்கி குவியத் தொடங்கியது. மேலும் படிக்க | கட்சி ஆரம்பித்‌த நடிகர்கள் யாரும் ஆட்சி அமைக்கவில்லை - சி. விஜயபாஸ்கர்! நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. விமான சாகச நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் பிற இடங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகளும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகினர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு இருந்து தற்போது வரை மெட்ரோ ரயில் நிலையங்கள், மின்சார ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமா காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சேப்பாக்கம் ரயில் நிலையம், கலங்கரை விளக்கம் ரயில் நிலையங்களிலும், அரசினர் தோட்டம் - எல்ஐசி மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. புறநகர் ரயில்கள், பேருந்துகள் போதுமான அளவிற்கு இயக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர். அதுவும் மெரினாவிலும் மெரினாவுக்கு செல்லும் சாலைகளிலும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் கடுமையான வெயிலை சமாளிக்க எவ்வித ஏற்பாடுகளும் மாநகராட்சி தரப்பிலோ, அரசு தரப்பிலோ செய்யப்படவில்லை என விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மெட்ரோ நிலையங்களில் பொதுமக்கள் குவிந்ததை அடுத்து சென்னை மெட்ரோ குறைந்த இடைவெளிகளில் மெட்ரோ ரயில்களை இயக்கின. இதுகுறித்து சென்னை மெட்ரோ அதன் X பக்கத்தில்,"வண்ணாரப்பேட்டை மெட்ரோ & ஏஜி டிஎம்எஸ் மெட்ரோ இடையே மெட்ரோ ரயில்கள் 3.5 நிமிட இடைவெளியில் இயங்கும். மேலும் காரிடார்-1 பிரிவில் (விம்கோ நகர் டிப்போ மெட்ரோ- விமான நிலைய மெட்ரோ) 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயங்கும். வழக்கம் போல், பச்சை வழித்தடத்தில் (புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ - செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ) 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகின்றன" என குறிப்பிட்டிருந்தது. இந்திய விமானப் படையின் 92ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் இந்த விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரில் பார்வையிட்டதாகவும், இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது என்றும் விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் தெரிவித்திருந்தார். மேலும் படிக்க | மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோ சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.