TAMIL

இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்... யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

Sri Lanka Elections 2024: 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை தோற்கடித்து மார்க்சிஸ்ட் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அந்நாட்டில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. திஸாநாயக்க நாளை பதவியேற்கிறார் அந்த வகையில், 55 வயதான அனுரகுமார திஸாநாயக்க மொத்தம் 42.31 சதவீத வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலை வென்றுள்ளார் என இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 32.76% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்த நிலையில், தற்போது அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே 17.27% வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள திஸாநாயக்க நாளை பதவியேற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க | லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம்... கேரள நபருக்கு தொடர்பு? - யார் இந்த ரின்சன் ஜோஸ்? யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க? தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா (JVP) ஆகியவற்றுக்கு திஸாநாயக்க தலைமை தாங்குகிறார். இவர் இலங்கையில் ஆண்டாண்டு காலமாக நிலவிய பாரம்பரிய அரசியல் கட்டமைப்புகளால் அதிருபதியும் ஏமாற்றமும் அடைந்த வாக்காளர்களை நோக்கி, ஒரு மாற்றத்திற்கான அரசியல் முன்னெடுப்பை செயல்படுத்தி அதன்மூலம் தன்னை மக்கள் மத்தியில் நிலைநிறுத்திக்கொண்டார் எனலாம். ஊழல் எதிர்ப்பு மட்டுமின்றி சமூக நீதி உள்ளிட்டவற்றில் வரலாற்று ரீதியாக கவனம் செலுத்தும் மார்க்சிஸ்ட் கொள்கை சார்ந்த இயக்கமான JVP-இல் இருந்து அவரது NPP கட்சி உருவானது. இலங்கையின் தம்புத்தேகம பகுதியில் தொழிலாள வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் அனுரகுமார திஸாநாயக்க. இவர் 1990 காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட பொதுவுடமை சார்ந்த எழுச்சியில், ஒரு மாணவர் தலைவராக உருவெடுத்தார். 1998ஆம் ஆண்டு அவர் JVP இயக்கத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அமைப்பான பொலிட்பீரோவில் உறுப்பினரானார். 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது அவருக்கு முதல் அங்கீகாரம் கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக இருந்தார். ஒரு வருடத்திலேயே அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். திஸாநாயக்க முதன்முதலில் 2019ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அதில் வெறும் 3% வாக்குகளை மட்டுமே பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. திஸாநாயக்க X தள பதிவு இலங்கை தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் திஸாநாயக்க அவரது X தளத்தில் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த X பதிவில், "பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு தற்போது இறுதியாக நனவாகியிருக்கிறது. இந்த சாதனை எந்த ஒரு தனிநபரின் உழைப்பால் வந்தது அல்ல. நம்மை போன்ற லட்சக்கணக்கானோரின் கூட்டு முயற்சியின் விளைவுதான் இது. உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது, அதற்காக நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. The dream we have nurtured for centuries is finally coming true. This achievement is not the result of any single person’s work, but the collective effort of hundreds of thousands of you. Your commitment has brought us this far, and for that, I am deeply grateful. This victory… pic.twitter.com/N7fBN1YbQA — Anura Kumara Dissanayake (@anuradisanayake) September 22, 2024 இந்த நோக்கத்திற்காக தங்கள் வியர்வையையும், கண்ணீரையும், தங்கள் வாழ்க்கையையும் கூட அர்ப்பணித்த பலரின் தியாகத்தால் எங்கள் பயணம் செதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் தியாகங்கள் மறக்கப்படவில்லை. அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களின் செங்கோலை நாங்கள் தாங்குகிறோம். நம்பிக்கையினாலும் எதிர்பார்ப்பினாலும் நிரம்பிய கோடிக்கணக்கான கண்கள் என்னை முன்னோக்கித் தள்ளுகின்றன. ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம். இந்த கனவை புதிய தொடக்கத்தில் மட்டுமே நனவாக்க முடியும். சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து இலங்கை நாட்டினரின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையில் இருந்து எழும். நாம் ஒன்றாக இணைந்து இந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க | ஆபீஸில் உடலுறவு வச்சுக்கோங்க! அதிபர் கொடுத்த அட்வைஸ் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.