TAMIL-NADU

விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை - ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி!

ஈரோட்டில் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகங்களை வழங்கினார். தறிபட்டறை தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்ட முதலமைச்சர், ஆட்சி குறித்தும் மக்களிடம் கேட்டறிந்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2-ஆவது கோடி பயனாளியான, ஈரோடு நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தரம்பாள் என்ற மூதாட்டியின் வீட்டிற்கே சென்ற முதலமைச்சர் மருந்துப் பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார். இதே போல, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்று வரும் வசந்தா என்ற பயனாளியையும் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். தங்களது வீட்டுக்கு முதலமைச்சர் வந்து சென்றது மகிழ்ச்சி அளிப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர். இதனிடையே, ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் சாலையின் இருபுறமும் திரண்டு முதலமைச்சருக்கு திமுகவினரும், மக்களும் வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர், ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் தறிப்பட்டறைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தொழிலாளர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கீடு செய்ய வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்தபோது, அது பரிசீலனையில் இருப்பதாக முதலமைச்சர் பதில் அளித்தார். இதன் பின்னர், ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ., ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டம் குறித்த எக்ஸ் பதிவில், ஈரோட்டின் பாதை 2026-இல் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டுவதாக அமைய வேண்டும் எனவும், இலக்கு 200 என்பதில் ஈரோட்டின் பங்கு இணையற்றதாக இருக்க வேண்டும் என்பதையும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ஈரோடு வேப்பம்பாளையத்தில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ V.C.சந்திரகுமாரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர், மணமக்களை வாழ்த்தினார். இன்று, ஈரோடு புறநகர்ப் பகுதியான சோலாரில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர், 951 கோடி ரூபாய் மதிப்பிலான 559 திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, 133 கோடி மதிப்புள்ள 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 284 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.