TAMIL-NADU

TN Assembly | உரையை வாசிக்காமலேயே வெளியேறிய ஆளுநர் - சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது மரபு. அந்த வகையில் 2023ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை முறைப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். காலை 9.30 மணி அளவில் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த திட்டமிடப்பட்டது. அதன்படி, 9.30 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார் ஆளுநர் ரவி. அவரை வரவேற்ற சபாநாயகர் அப்பாவு, காவல்துறை மரியாதைக்கு பின் பேரவைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அரசின் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார். சட்டப்பேரவையில் நடந்தது என்ன? 9.30 மணிக்கு ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் உள்ளே வரும்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ''அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்'' என முழக்கம் எழுப்பினார். தொடர்ந்து நேராக உள்ளே வந்து வணக்கம் தெரிவிக்கும் முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும் ஆளுநர் உட்கார்ந்திருந்த சபாநாயகர் இருக்கைக்கு முன் வேல்முருகன் உடன் கூடிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மறுபுறம், ''யார் அந்த சார்?'' என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அரசு எதிராக கோஷத்தை முன்வைத்தனர். இருதரப்பையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களிடம், ''தேசிய கீதம் இசைக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு அவமரியாதை செய்யக்கூடாது. அமைதியாக இருங்கள்'' என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டார். எனினும், எம்எல்ஏக்கள் தங்கள் கூச்சலைத் தொடர்ந்து எழுப்பினர். இரண்டு நிமிடங்கள் காத்திருந்த ஆளுநர், பின்னர் தேசிய கீதம் அவமதிக்கப்படுவதாகக் கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஆளுநர் மாளிகை விளக்கம் இதற்கிடையே, ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், ''தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது. இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் சபாநாயகர், முதலமைச்சர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் டெலிட் செய்யப்பட்டது. 3வது ஆண்டாக உரையை வாசிக்காத ஆளுநர் இந்த ஆண்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் தனது உரையை முழுமையாக வாசிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கு காரணம், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிய போது, அரசு தயார் செய்த உரையில் இருந்த திராவிடம் என்ற வார்த்தையையும், சில பகுதிகளையும் விட்டுவிட்டு படித்தார். அப்போது, ஆளுநரின் சில பகுதிகளை விட்டுவிட்டு படித்ததற்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவையில் இருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை அதுவரை பார்த்திராத அந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்தாண்டு பிப்ரவரி 12ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய போது, பேரவை தொடங்கும் முன்பும் இறுதியிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என கூறிய ஆளுநர், 4 நிமிடம் மட்டுமே உரையை வாசித்துவிட்டு அமர்ந்தார். இதன் காரணமாக ஆளுநரின் உரையின் தமிழ் பதிப்பை சபாநாயர் அப்பாவு முழுமையாக வாசிக்க நேர்ந்தது. இதனால், இந்த ஆண்டு ஆளுநர் உரையின் போது என்ன நடக்கும் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே, துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் ஆளுநர் - அரசு இடையேயான மோதல் நீறு பூத்த நெருப்பாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் ஆய்வு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த விவகாரம் குறித்து பேசுவாரா என்பதும் புதிராக இருந்தது. இந்த நிலையில் தான் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியிருக்கிறார் ஆளுநர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.