NEWS

சுனாமியால் கிடைத்த பந்தம்.. பேத்தியை உச்சிமுகர்ந்த ராதாகிருஷ்ணன்! - நாகையில் நெகிழ்ச்சி சம்பவம்!

சுனாமி பேரலையில் தாய், தந்தையை இழந்த குழந்தையை அள்ளி அரவணைத்து வளர்த்து திருமணம் செய்து வைத்து, தற்போது தாத்தா, பாட்டியாக மாறியிருக்கின்றனர் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக கூட்டுறவுத் துறை செயலருமான ராதாகிருஷ்ணன் தம்பதியினர். சுனாமியால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈன்றெடுத்த குழந்தையையும் பேத்தியாக உச்சிமுகர்ந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2004-ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமி, பல்வேறு பகுதிகளையும் சூறையாடியது. இதில், நாகை மாவட்டத்தின் கீச்சாங்குப்பம் கடலோரத்தில் இரண்டு வயது குழந்தையின் அழுகுரல் கேட்ட மீனவர்கள், குழந்தையை மீட்டு அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். அதேபோல, வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட 2 வயது குழந்தையும் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளையும் நாகையில் உள்ள அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்ட ராதாகிருஷ்ணன், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு சௌமியா என்றும், கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு மீனா எனவும் பெயர் சூட்டினார். இரு குழந்தைகளையும் தனது குழந்தைகளாக பாவித்து பெற்றோரைப் போல கவனித்துக் கொண்டதால், ராதாகிருஷ்ணனை “அப்பா” என்றும், அவரது மனைவி கிருத்திகாவை “அம்மா” என்றும் குழந்தைகள் அழைத்து வந்தனர். இந்நிலையில், சௌமியாவும் மீனாவும் 18 வயதை எட்டியதால் காப்பகத்தில் தங்குவதில் நடைமுறை சிக்கல் இருந்ததால், அப்போது சுகாதாரச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனின் அனுமதியுடன் நாகை கடற்கரைச் சாலையில் உள்ள மலர்விழி - மணிவண்ணன் தம்பதியினர் சௌமியாவையும், மீனாவையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பி.ஏ. பட்டதாரியான சௌமியாவிற்கு, திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுபாஷ் என்பவருடன், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி, நாகையில் ராதாகிருஷ்ணன் தலைமையில் திருமணம் நடந்தது. இந்நிலையில், அழகான பெண் குழந்தையை அண்மையில் சௌமியா பெற்றெடுத்தார். தகவல் அறிந்து குடும்பத்துடன் நாகைக்கு வந்த ராதாகிருஷ்ணன், மலர்விழி வீட்டிற்குச் சென்று மகிழ்ச்சியோடு சௌமியாவை அரவணைத்து ஆசீர்வதித்து குழந்தையை உச்சி முகர்ந்து முத்தமிட்டு மடியில் நீண்ட நேரம் வைத்திருந்து மகிழ்ந்தார். Also Read | Exclusive | ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறுவது அவரது பலவீனம் : விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்! இதனால், மகிழ்ச்சியில் வாயடைத்து நின்ற சௌமியா, நெகிழ்ச்சியான நேரமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பழைய நினைவுகளை மறக்காமல் இன்றுவரை தங்களுக்கு ஆதரவாக இருந்து வருவதாக வளர்ப்புத்தாய் மலர்விழி குறிப்பிட்டார். பலருக்கும் உதவிசெய்யும் குணம் படைத்த அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தான் கவனித்துக் கொண்ட பெண்ணின் குழந்தையை பேத்தியாக பாவித்து உதவிவருவது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செய்தியாளர் - பால முத்துமணி None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.