TAMIL-NADU

எங்கள் குழந்தைகள் தாக்கப்படவில்லை.. நெல்லை நீட் பயிற்சி மாணவர்களின் பெற்றோர் பரபரப்பு மனு

கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு ‘JAL NEET ACADEMY’ என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை தொடங்கினார். இந்த பயிற்சி மையத்தில் படித்த 12 பேர் கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்ததாக கூறப்படுகிறது. இங்கு தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தேர்வு முடிந்து ஆசிரியர் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் மாணவர்கள் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்ட ஜலாலுதீன் அஹமத் வெட்டியாடன், மாணவர்களை கம்பால் சரமாரியாக தாக்கிய பதறவைக்கும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகியது. அதேபோல் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள இதே பயிற்சி மையத்திலும் மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகின. அங்கு, படிப்பறையின் வெளியே காலணிகளை மாணவர்கள் சரியாக அடுக்கி வைக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் காலணியை எடுத்துக் கொண்டு படிப்பறைக்கு சென்றுள்ளார். அது யாரின் காலணி என கேட்டபோது, ஒரு மாணவி எழுந்து தன்னுடையது என கூறியதும், ஆசிரியர் அவர் மீது காலணியை தூக்கி வீசிம் காட்சியும் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட நீட் பயிற்சி உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். சமூக நலத்துறையிடம் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த விடுதியை காலி செய்ய கட்டட உரிமையாளர் கோரியதை அடுத்து, மாணவ, மாணவிகள் வெளியேறினர். திருநெல்வேலியில் ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், நீட் பயிற்சிக்காக தங்கியிருந்த மாணவ மாணவிகள் விடுதியை காலி செய்தனர். இதையும் படியுங்கள் : “கடைசி தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டு கூட பார்க்க முடியாது” - உதயநிதி ஸ்டாலின் இந்த நிலையில் நீட் அகாடமி தொடர்ந்து இயங்கி வருகிறது. தாக்குதலுக்கு ஆளான மாணவர்களின் பெற்றோர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் தங்கள் குழந்தைகள் தாக்கப்படவில்லை என்றும், அவதூறு பரப்பும் நோக்கில் சிலர் இதனை பெரிதுபடுத்துவதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளனர். ஒரு புறம் மாணவர்கள் தாக்கப்படும் சி.சி.டி.வி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தாக்கப்படவில்லை என ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் இந்த விவகாரத்தில் பெரும் முரணை ஏற்படுத்தியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.