BUSINESS

பார்த்தால் யோகம்.. வளர்த்தால் லாபம்... மாதம் ரூ.3.50 லட்சம் வருமானம் தரும் கழுதை பண்ணை...

கழுதை பண்ணை ‘என்னைப் பார் யோகம் வரும்’ வாசகத்தைக் கேட்டாலோ அல்லது பார்த்தாலோ நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது கழுதைகள் தான். காலை வேளையில் சுப காரியங்களுக்குச் செல்வோர் கழுதையின் முகத்தைப் பார்த்துச் சென்றால் நற்காரியங்கள் விளையும் என்பார்கள். மேலும் இன்னமும் பல பகுதிகளில் கழுதைகள் சுமை தாங்கிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. இதனினும் மேலாகக் கழுதை பாலில் உள்ள மருத்துவ குணம் சிறப்பு வாய்ந்தது. கழுதை பாலில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதால் இதன் மகத்துவம் நாளடைவில் பெருகிக் காணப்படுகிறது. கழுதைப் பாலை பயன்படுத்தி எண்ணற்ற அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இப்படி எண்ணற்ற நன்மைகளைப் பயக்கும் கழுதைகளின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் கழுதைகளின் எண்ணிக்கை சராசரியாக 12,000க்கும் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலிலும் கால்நடைகள் வளர்த்து தொழில் முனைய விரும்புபவர்கள் பெரும்பாலும் ஆடு மாடுகள் தான் வளர்கின்றனர். அரிதாகச் சிலர் கழுதைகளை வளர்த்து அதன் பாலை மட்டுமே வருமானம் தரும் வழியாகப் பார்க்கின்றனர். இதையும் படிங்க: பாட்டி கால பாரம்பரிய வெண்ணெய் கடையும் மத்து… கலை வடிவில் கிளி மத்தாக்கிய பி.டெக் பெண்… ஆனால் திருச்சி மாவட்டத்தில் முசிறி - துறையூர் செல்லும் வழியில் எம்.புதுப்பட்டி என்ற கிராமப் பகுதியில் ராஜூ ஜோசப் என்பவர் 6 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாகக் கழுதை பண்ணை நடத்தி வருகிறார். அதிலும் இவர் பிறரைப் போல கழுதைகளிலிருந்து பால் மட்டும் இன்றி பலவகை பொருட்களைத் தயாரித்து மாதந்தோறும் லட்சங்களில் வருமான ஈட்டி வருகிறார். மேலும் இவர் கழுதை பண்ணை அமைக்க விரும்புபவர்களுக்குத் தான் பின்பற்றும் நுணுக்கத்தையும் கற்பித்து வருகிறார். தமிழ்நாட்டில் தற்போது கழுதைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது. இதனை அறிந்த இவர் ஆடு, மாடு, கோழி போன்றவற்றிற்குப் பண்ணை இருக்கிறது ஆனால், அழிந்து வரும் உயிரினமான கழுதைக்குப் பெரிதாகப் பண்ணை இல்லை என்பதை அறிந்து கழுதை பண்ணை அமைக்க முன்னேற்பாடுகளைத் துவங்குகிறார் அந்த சமயத்தில் கழுதைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தால் இவருக்குக் கழுதைகள் கிடைப்பது சிரமமாக இருந்திருக்கிறது. இவர் கண்களுக்குப் புலப்பட்ட கழுதைகள் ஐந்து முதல் ஆறு என்ற ஒற்றை இலக்கத்தில் தென்பட்டு இருக்கிறது. அதுவும் வயது முதுமை அடைந்த கழுதைகள், உடல் நலிவடைந்த நாட்டுக் கழுதைகள் இதனை வைத்துத் தான் தொழில் தொடங்கி தற்போது பிறருக்கு முன்மாதிரியாகத் திகழும் அளவிற்கு உருவெடுத்துள்ளார் ராஜூ ஜோசப். இதையும் படிங்க: வாழைத்தாரில் வந்த இரண்டு உயிர்கள்… வாழ்வளித்த வாழை வியாபாரி… கழுதை பண்ணை குறித்து ராஜூ ஜோசப் கூறுகையில், “வழக்கறிஞரான எனக்கு ஆடு, மாடு, கோழி மற்றும் விவசாயம் மீது அதீத பிரியம். முதலில் ஆடு, மாடுகளைக் கொண்டு தான் பண்ணை நடத்தி வந்தேன் சில நாட்கள் போய்க்கொண்டிருந்தது அப்போது நினைவு கூர்ந்தேன், நாம ஏன் கழுதை பண்ணையும் ஆரம்பிக்கக் கூடாது.? என்று, அதன் வகையில் கழுதைகள் மீது நாட்டம் கொண்டு கழுதை பண்ணைத் தொழில் செய்யத் துவங்கினேன். நான் தொழில் துவங்கிய ஆரம்பக் காலகட்டத்தில் என்னடா கழுதை எல்லாம் மேய்க்கிற இது எல்லாம் ஒரு பொழப்பா என்று ஏளனமாகப் பேசினார்கள். அதையெல்லாம் நான் சிறிதும் கண்டு கொள்ளாமல் கடந்து வந்தேன். பல வருடங்கள் கழித்து நான் வாழ்வதைப் பார்த்து தன்னை ஏளனமாகப் பேசியவர்கள் எல்லாம் தன்னை வியந்து பார்க்கிறார்கள். நான் விரும்பி தொடங்கிய தொழில் இன்று எனக்குப் பல பாராட்டுகளையும், நன்மைகளையும் தேடித்தந்துள்ளது. எனது கழுதை பண்ணையில் கழுதைப் பாலை கொண்டு பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கழுதை முடியைக் கொண்டு தாயத்தும், லத்தியைக் கொண்டு சாம்பிராணியும் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட மூடுகிறது. இவை முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. நிறையப் பொதுமக்கள் எங்களிடம் நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும் வேண்டிய பொருட்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றில் ஒரு கீழடி… மண் மூடிய வரலாற்றை நடந்து சென்று கண்டறிந்த எழுத்தாளர்… கழுதைகள் இனம் அழிவின் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த நான் இந்த காலத்து இளைஞர்கள் இத்தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறேன். அதன்படி கழுதை வளர்ப்பு பற்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகிறேன். இந்த வகுப்பின் மூலம் எண்ணற்ற இளைஞர்கள் இந்த கழுதை குறித்த பயிற்சி வகுப்பின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த பயிற்சி வகுப்பில் கழுதைப் பண்ணை எப்படி துவங்க வேண்டும்? அதற்கு லோன் பெறுவது எப்படி? பண்ணை அமைப்பதன் மூலம் கழுதைகளை எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் கழுதை இனத்தை மீட்டெடுக்கவே இந்த சிறிய முயற்சி. பல நற்பயன்கள் கொண்ட கழுதை இனம் அழிவின் விளிம்பில் இருப்பது வேதனையாக உள்ளது. கழுதை இனத்தைக் காக்க தமிழக அரசு சிறந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இவர் கழுதைப் பண்ணை துவங்கியுள்ள ஆரம்ப காலத்தில் ஐந்து முதல் ஆறு கழுதைகள் இவரிடம் இருந்துள்ளது. தற்போது 50க்கும் மேற்பட்ட கழுதைகள் உள்ளது. பார்த்தால் யோகம் வரும் எனக்கூறி பார்ப்பதே அரிதாகிவிட்ட கழுதையை வளர்த்து மாதம் ரூ.3,50000 வரை சம்பாதிக்க முடியும் என இவர் காட்டும் தொழில் வாய்ப்பினை ஏராளமான இளைஞர்கள் பின்தொடரத் துவங்கியுள்ளதை ராஜூ ஜோசப்பின் வெற்றியாகத் தான் கூற முடியும். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.