TAMIL-NADU

யாசகம் பெற்று ஐபிஎஸ் வேலையில் சேரவில்லை.. சீமானுக்கு எஸ்பி வருண்குமார் பதில்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி எஸ்பி வருண்குமார் இடையேயான வார்த்தை மோதல் வலுத்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேரத்தில் தொடங்கிய, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த சீமான், அரசியல் பொதுக்கூட்ட மேடையிலேயே திருச்சி எஸ்பி வருண்குமாரை காட்டமாக விமர்சித்தார். அந்த பேச்சுக்கு எதிராக சீமானுக்கு வருண் குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பின்னர், சமூக வலைதளங்களில், நாம் தமிழர் கட்சியினர், தன்னையும், தன் குடும்பத்தினரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும், அருவறுக்கத்தக்க வகையிலும் விமர்சிப்பதாக திருச்சி எஸ்பி வருண்குமார் குற்றம்சாட்டினார். மேலும், அது தொடர்பாக சைபர் கிரைமிலும் புகார் அளித்தார். Also Read: பிஎம் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் எத்தனை சதுர அடியில் இருக்க வேண்டும்? விலக முடிவு இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தானும், புதுக்கோட்டை எஸ்பியாக உள்ள தனது மனைவி வந்திதா பாண்டேவும், எக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக நேற்று முன்தினம் வருண் குமார் அறிவித்தார். தன்னையும், தனது குடும்பத்தையும் சமூகவலைதளத்தில் அவதூறாகப் பேசும் இணையத்தள கூலிப்படையினர் மற்றும் அவர்களை தூண்டிவிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என தனது கடைசி எக்ஸ் பதிவில் வருண் குமார் கூறியிருந்தார். இது குறித்து பதில் அளித்த சீமான், தனக்கு ஏற்கனவே இருக்கும் 138 வழக்குகளை 200 வழக்குகளாக மாற்ற முயற்சிக்காதீர்கள். எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும், தன் வீட்டு குப்பைத் தொட்டியில் தான் போடுவேன் என்று தெரிவித்தார். மேலும், ஐபிஎஸ் அதிகாரியாக இல்லாமல், திமுகவின் ‘ஐடி விங்’ ஆக வேலை செய்கிறீர்கள் என்று வருண் குமாரை கடுமையாக சாடிய சீமான், வீரராக இருந்தால் ஐபிஎஸ் பதவியில் இருந்து விலகிவிட்டு நேருக்கு நேர் மோதுமாறு சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய திருச்சி எஸ்பி வருண் குமார், தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மூலம் சீமான் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார். யாசகம் பெற்று பதவி கிடைக்கவில்லை திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ தனக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. இரவு பகலாக ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி படித்து, உழைத்துப் பெற்ற வேலை. மேலும், 2010-இல் யுபிஎஸ்சி தேர்வில் மூன்றாம் இடம் பிடித்ததை சுட்டிக்காட்டியுள்ள வருண் குமார், ஐபிஎஸ் பணியே தனது முதல் விருப்பம். பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், தான் காக்கி சட்டையை கழற்றுவது பற்றி யோசிக்கிறேன். தான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமா? எனவும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். கட்சித் தலைவருக்கும், காவல் அதிகாரிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே செல்வது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.