NATIONAL

இந்துக்களின் பிரதிநிதியாக.. ஜம்மு காஷ்மீர் துணை முதல்வரான சுரிந்தர் சவுத்ரி... யார் இவர்?!

ஜம்மு காஷ்மீர் துணை முதல்வராக சுரிந்தர் சவுத்ரி என்பவர் பதவியேற்றுள்ளார். யார் இவர், துணை முதல்வரான பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்… ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக உமர் அப்துல்லா முடிவு செய்யப்பட்டு, இன்று (16-ம் தேதி) அவர் பதவி ஏற்றார். இவருக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வராக சுரிந்தர் சவுத்ரி என்பவர் பொறுப்பேற்றார். யார் இந்த சுரிந்தர் சவுத்ரி?: ஜம்மு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட சுரிந்தர் சவுத்ரி, இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஜாட் சமூகத்தை பின்னணியாகக் கொண்ட ஜம்மு பகுதியில் உள்ள இந்து மத அரசியல்வாதிகளில் மிகவும் முக்கியமானவர். சுரிந்தர் சவுத்ரியின் ஆரம்ப கால அரசியல் பயணம், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியில் இருந்தது. பிடிபி கட்சியும், பாஜகவும் 2014-ல் கூட்டணி ஆட்சி அமைத்ததில் சுரிந்தர் சவுத்ரியின் பங்கு மிகப்பெரியதாம். மெகபூபா முப்தியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்த சுரிந்தர், பின்னாளில் பாஜகவில் ஐக்கியமானார். ஆனால், பாஜகவின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா உடன் உரசல் ஏற்பட, பாஜகவில் இருந்து தேசிய மாநாட்டு கட்சியில் கடந்த ஆண்டுதான் இணைந்தார் சுரிந்தர். அவருக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதுவும், பாஜகவில் அவருக்கு யாருடன் உரசல் ஏற்பட்டதோ அவரை எதிர்த்துப் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. பாஜகவின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னாவை எதிர்த்து நவ்ஷாரா சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டார். நவ்ஷாரா தொகுதி, ரவீந்தர் ரெய்னா ஏற்கனவே வென்ற தொகுதி மட்டுமல்ல, இந்துக்கள் அதிகம் உள்ள தொகுதியும் கூட. இதனால், ரவீந்தர் ரெய்னாவே வெற்றிபெறுவார் என பாஜக அதிகம் எதிர்பார்த்த நிலையில், அதற்கு நேர்மாறாக சுரிந்தர் சவுத்ரி வெற்றியைப் பதிவு செய்தார். ரவீந்தர் ரெய்னாவை 7,819 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுரிந்தர் சவுத்ரி வீழ்த்தினார். இந்த வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஜம்மு காஷ்மீரில் பாஜக 29 தொகுதிகளில் வென்றது. கடந்த தேர்தலைக் காட்டிலும், இது நான்கு தொகுதிகள் அதிகம். அப்படிப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னாவை சுரிந்தர் சவுத்ரி வீழ்த்தியது, அவரின் பக்கம் கவனத்தைத் திருப்ப வைத்தது. அதோடு, ஜம்மு பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள இந்துக்கள் மத்தியில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம், கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் கூடுதலாக வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்றவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்துக்கள். Also Read | ஜம்மு காஷ்மீரின் முதல்வராக பதவியேற்ற பின் உமர் அப்துல்லா சொன்ன அந்த வார்த்தை! - என்ன தெரியுமா? இப்படியான சூழலில்தான் பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்யும் விதமாக இந்து மதத்தைச் சேர்ந்த வலுவான தலைவராக உள்ள சுரிந்தர் சவுத்ரிக்கு துணை முதல்வர் பதவியை உமர் அப்துல்லா கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப, உமர் அப்துல்லா அளித்துள்ள பேட்டியில், ‘ஜம்முவும் எங்களின் ஓர் அங்கம்தான். இந்த அரசில் தங்களுக்கான பிரதிநிதி இல்லை என்பதை ஜம்மு மக்கள் உணர விடமாட்டோம். அதனால்தான், ஜம்முவில் இருந்து ஒரு துணை முதல்வரைத் தேர்ந்தெடுத்துள்ளேன். இதன்மூலம், ஜம்மு மக்கள் இந்த அரசாங்கம் தங்களுக்குச் சொந்தமானது என்று உணர வேண்டும்’ எனக் கூறியுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.