NATIONAL

Ratan Tata | ரத்தன் டாடா.... இந்திய ஆட்டோ மொபைல் துறையில் மாற்றத்துக்கு வித்திட்ட தொழிலதிபர்!

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, மும்பையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். உப்பு விற்பனை, கைக்கடிகாரம், இரும்பு, மோட்டார் வாகனத் துறை, விமான நிறுவனம், மென்பொருள் நிறுவனம் என பல்வேறு தொழில்களில் கோலோச்சி வரும் டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் தான் ரத்தன் டாடா. மும்பையில் 1937-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதியன்று நாவல் டாடா, சுனு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். மும்பை மற்றும் சிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்தார். இவருக்கு 10 வயது இருக்கும்போதே இவரின் பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டனர். பிறகு, பாட்டியின் அரவணைப்பில்தான் ரத்தன் டாடா வளர்ந்திருக்கிறார். 1962-இல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். அதே ஆண்டில் தேடி வந்த ஐபிஎம் நிறுவனத்தின் வேலை வாய்ப்பை நிராகரித்துவிட்டு டாடா குழுமத்தில் இணைந்த ரத்தன் டாடா, டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பயிற்சியாளராக தனது பணியைத் தொடங்கினார். 1971-இல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த ‘நெல்கோ’ எனப்படும் தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். ரத்தன் டாடாவின் ஆலோசனைகளால் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய நெல்கோ நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு இரண்டாயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது. 1975-இல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார். 30 வருட அயராது கடின உழைப்பின் வெற்றிக்குப் பின்னர், 1991-ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். அதன் பின் டாடா குழுமத்தின் வணிகங்களை உலகமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். டெட்லி டீ, கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்தியது. இதன்மூலம், ஒட்டுமொத்த உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் ரத்தன் டாடா. சொந்த கார் என்ற கனவு ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்ததை மாற்றியமைத்தவர் ரத்தன் டாடா. Also Read | சகாப்தம் முடிவுக்கு வந்தது… மறைந்தார் தொழிலதிபர் ரத்தன் டாடா!! பிரதமர் மோடி இரங்கல் இவரது கனவுத் திட்டமான நானோ கார், 2009-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நடுத்தர வகுப்பைச் சேர்ந்த இந்தியக் குடும்பங்களின் கனவாக இருக்கும் கார் மோகத்தை நனவாக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், குறுகிய காலத்திலேயே அதன் உற்பத்தி நின்றுவிட்டபோதும் இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த விலையிலான கார் என்றால் அது டாடா நானோ கார் தான். இதன்மூலம், தனது நிறுவனத்துக்கு மட்டுமின்றி நாட்டுக்காகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்பதை நிரூபித்தார். டிசம்பர் 2012-இல் டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு வளர்ச்சியடைந்தது. 1991 இல் வெறும் 10 ஆயிரம் கோடியாக இருந்த நிறுவனத்தின் உற்பத்தி மதிப்பு, 2012 இல் எட்டு லட்சம் கோடி ரூபாயை கடந்தது. அவருக்குப் பின்பு டாடா குழுமத்தின் தலைவராகப் பதவியேற்ற சைரஸ் மிஸ்திரி பல பிரச்சனைகளுக்குப் பின்பு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 2016 முதல் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா சிறிது காலம் பணியாற்றினார். டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட நிலையில், ரத்தன் டாடா ஜனவரி 2017-இல் ஓய்வு பெற்றார். மக்களின் நலனுக்காக பல கோடி ரூபாயை நன்கொடையாக அறக்கட்டளைகளுக்கு வழங்கியிருக்கிறார். கல்வி, மருத்துவம், தண்ணீர், விவசாயம் என கிராமப்புற வளர்ச்சிக்காகவும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார் ரத்தன் டாடா. வாயில்லா ஜீவன்கள் மீது அதீத பாசம் கொண்ட ரத்தன் டாடா, மும்பையில் உள்ள இல்லத்தில் தெரு நாய்களைப் பராமரிப்பதற்காக வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். ரத்தன் டாடா பயிற்சி பெற்ற விமானி மற்றும் உரிமம் பெற்றவர் ஆவார். 2007-இல் பெங்களூரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின்போது, F-16 விமானத்தில் பறந்த முதல் இந்தியக் குடிமகனும் இவரே ஆவார். கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர். பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் குழு உறுப்பினராக இருந்தவர். தொழில் நிறுவனங்களைத் திறமையாக வழிநடத்திய ரத்தன் டாடா, திருமணப் பந்தத்துக்குள் நுழையாமலேயே தவிர்த்துவிட்டார். ரத்தன் டாடா தொழில்துறை மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண், பத்ம விபூஷன் விருதுகளை வழங்கிக் கௌரவித்தது. சிங்கப்பூர் அரசின் கௌரவக் குடிமகன் அந்தஸ்து, இங்கிலாந்து அரசின் கௌரவ ‘நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர்’ ஆகிய கௌரவங்களைப் பெற்றுள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னோடியாகவும், உலக அரங்கில் ஆளுமை மிக்க தலைவராகவும் வலம் வந்த ரத்தன் டாடாவின் மறைவு ஒட்டுமொத்த தேசத்தையே துயரில் ஆழ்த்தியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.