NATIONAL

நாட்டையே உலுக்கிய படுகொலைகள்.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்.. கேங்ஸ்டராக உருவெடுத்தது எப்படி?

நாடு முழுவதும் சுமார் 700 பேர் கொண்ட தாதா கும்பலை சிறையிலிருந்தபடியே கட்டுப்படுத்தி வரும் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் நாட்டையே அச்சுறுத்தும் அளவுக்கு பெரிய தாதாவாக உருவெடுத்தது எப்படி? யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்… அவரது பின்னணி என்ன?… மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், அவரது கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கேங்ஸ்டர் கும்பல் நாடு முழுவதும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வரும் இந்த கும்பல், “சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக்கின் கதிதான் அவர்களுக்கும் ஏற்படும்” என்று வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருந்தது. இந்த கும்பலை சிறையிலிருந்தபடியே இயக்கி வரும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய், மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிற்கு அடுத்தபடியாக சட்டத்துக்கு பயப்படாமல் துணிச்சலாக இயங்கி வரும் தாதாவாக பார்க்கப்படுகிறார். கடந்த சில வருடங்களாக நாட்டில் உயர்மட்டத்தில் நடக்கும் பல்வேறு குற்றச்செயல்களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயர் அடிபடுவதை சாதாரணமாக காண முடிகிறது. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருக்கும் இவர் எப்படி நாட்டையே அச்சுறுத்தும் கேங்ஸ்டராக வலம் வருகிறார். இந்தியாவில் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற அடியாட்களை கொண்டிருக்கும் மிகப்பெரிய தாதா கும்பல் தான் பிஷ்னோய் கேங்ஸ்டர் கும்பல் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த கும்பலக்கு தலைவனாக செயல்பட்டு வரும் 31 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தட்டரன்வாலி [Dhattaranwali] கிராமத்தில் 1993ம் ஆண்டு பிறந்துள்ளார். அவரது தந்தை ஹரியானா காவல்துறையில் ஒரு சாதாரண கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த நிலையில், பின்னர் வேலையை விட்டு விட்டு விவசாயம் பார்க்கத் தொடங்கினார். லாரன்ஸ் குடும்பத்தினர் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக காணப்படும் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர்கள். சண்டிகரில் கல்லூரி படிப்பை தொடங்கிய லாரன்ஸ் அப்போதே மாணவர் அரசியல் என்ற போர்வையில் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அங்கு மற்றொரு கும்பல் தலைவனான கோல்டி பிரார் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் சேர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர். 2010 ஆம் ஆண்டு லாரன்ஸ் மீது முதல் வழக்கு பதிவாகியுள்ளது. அதன்பின் மாணவர் அரசியலில் ஈடுபட்டது தொடர்பாக சுமார் 7 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டன. Also Read | School Leave | நாளை (அக்.17) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா… எப்போது அறிவிக்கப்படும்?.. வெளியான அப்டேட்! சிறைக்கு சென்ற அவர் அங்கே மற்ற கைதிகளுடன் கூட்டணி அமைத்து ஆள் சேர்க்க ஆரம்பித்துள்ளார். சிறையிலிருந்து வெளிவந்த பின் ஆயுத வியாபாரிகள் மற்றும் உள்ளூர் குற்றவாளிகளுடன் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டார். 2013-இல் பட்டம் பெற்ற பிறகு, முக்தசரில் நடந்த அரசு கல்லூரி மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரையும், லூதியானா முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரையும் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. 2022ம் ஆண்டு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா பஞ்சாபின் மான்சாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கு லாரன்சின் கூட்டாளி கோல்டி பிரார் பொறுப்பேற்றார். அவர் பிஷ்னோயுடன் சேர்ந்து இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக தெரிவித்திருந்தார். இதேபோல் 2023 அன்று, காலிஸ்தான் பிரிவினைவாதி சுக்தூல் சிங் கில் கொல்லப்பட்டதற்கும் பிஷ்னோய் பொறுப்பேற்றார். 2023 டிசம்பரில் கர்னி சேனாவின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி ஜெய்ப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரோஹித் கோதாரா இந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்றார். என்ஐஏ அறிக்கையின்படி பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோருக்கு காலிஸ்தான் சார்பு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2015-இல் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தின் அகமதாபாத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருந்தபோதும் சிறையிலிருந்தபடியே தனது கும்பலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி வருகிறார். 1998-இல் நடிகர் சல்மான் கான் அரியவகை மான் வேட்டையாடிய வழக்கில் சிக்கியது முதல் பிஷ்னோய் சமூகத்தினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிஷ்னோய் சமூகத்தின் புனித விலங்காக கருதப்படும் மானை சல்மான் கான் வேட்டையாடியதால் லாரன்ஸ் அவருடன் பகையை வளர்த்துக் கொண்டார். சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த நிலையில் தான், சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த படுகொலையிலும் லாரன்சின் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விரவியிருக்கும் இந்த கும்பலை மத்திய அரசு எப்படி கட்டுப்படுத்தப் போகிறது. 3 மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பை மீறி லாரன்ஸ் கும்பல் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடு முழுவதும் பிஷ்னோய் கும்பலால் அரங்கேற்றப்படும் படுகொலைகள் தடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.