NATIONAL

பேஜர்களை போல இ.வி.எம்.களை ஹேக் செய்ய முடியுமா? - தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம்!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. டெல்லியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதியும், ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இரு கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் இரு மாநிலத்தில் பதிவாகும் வாக்குகளும் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டும் என்றும் அறிவித்தார். மேலும், கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அங்கிருந்து ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதிக்கும் வரும் நவம்பர் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த இரு மாநிலத் தேர்தலுக்கு முன்பாக ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பெரும்பாலன கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், இறுதியாக வாக்கு எண்ணிக்கையின் போது பா.ஜ.க. அந்த மாநிலத்தில் வெற்றி பெற்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துவரும் காங்கிரஸ் கட்சியினர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிரச்சனை என குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஏ.என்.ஐ.க்கு பேடி தந்த காங்கிரஸ் கட்சியின், முக்கிய பிரமுகரான ரஷித் அல்வி, “மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை பின்பற்ற எதிர்க் கட்சிகள் வலுவாக வலியுறுத்த வேண்டும். இல்லை என்றால் மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து எதுவேண்டுமானாலும் செய்யும். பேஜர்களையும் வாக்கி டாக்கிகளையும் கொண்டு இஸ்ரேல் மக்களை கொன்றது. அப்படி இருக்கும் போது இ.வி.எம். மட்டும் விதிவிலக்கா? இஸ்ரேலுடன் பிரதமர் மோடி நெருங்கிய நட்பு கொண்டவர். இஸ்ரேல் இது போன்ற விஷயங்களில் கைதேர்ந்தது” என்று தெரிவித்திருந்தார். இதையும் படியுங்கள் : மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி எப்போது? - தேர்தல் ஆணையம் அறிவிப்பு இது பெரும் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், இன்று தேர்தல் தேதியை அறிவிப்பு வெளியிடும்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “வெடிவிபத்துக்கு உபயோகப்படுத்தப்பட்ட பேஜர்களை போல் இ.வி.எம்.களையும் ஹேக் செய்ய முடியுமா என எங்களிடம் கேட்கப்படுகிறது. உண்மையில் பேஜர்கள் போல் இ.வி.எம்.கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி இ.வி.எம்.களை ஹேக் செய்யமுடியாது” என்று தெரிவித்துள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.