NATIONAL

கேரள பாஜகவில் இணைந்த முதல் பெண் ஐ.பி.எஸ்... யார் இந்த ஸ்ரீலேகா?

கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸும், முதல் பெண் டி.ஜி.பி.யுமான ஆர். ஸ்ரீலேகா இன்று கேரளா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 1987 பேட்சைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். ஆன ஸ்ரீலேகா, கேரளாவின் முதல் ஐ.பி.எஸ். எனும் சிறப்பை பெற்றவர். ஐ.பி.எஸ்.-ல் தேர்வான இவர், கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்தலாவில் உதவி எஸ்.பி.யாக தனது பணியைத் துவங்கியவர். பிறகு ஆலப்புழா, பத்தனம்திட்டா மற்றும் திரிச்சூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றினார். தொடர்ந்து, விஜிலின்ஸில் கூடுதல் டி.ஜி.பி., காவல்துறை வீட்டுக் காவலர்கள், சமூகக் காவல், பாலின நீதி ஏ.டி.ஜி.பி என பதவி உயர்வு பெற்றவர் இறுதியாக 2017ம் ஆண்டு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், கேரளாவில் முதல் பெண் டி.ஜி.பி. என்ற சிறப்பையும் அவர் பெற்றார். சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகளின் பொது இயக்குநராகவும் பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளின் டி.ஜி.பி.யாக பணியாற்றிய இவர் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ்., முதல் பெண் டி.ஜி.பி. எனும் சிறப்பால் கேரளா முழுவதும் பரவலாக ஸ்ரீலேகா அறியப்பட்டார். இந்நிலையில், இன்று அவர் கேரளா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். கேரளா பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. சுரேந்தரன், இன்று ஸ்ரீலேகா வீட்டிற்கு நேரில் சென்று பா.ஜ.க.வில் அவர் இணைந்ததற்கான உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து பேசிய ஸ்ரீலேகா, “33.5 வருடங்களாக எந்தக் கட்சி சார்பும் இன்றி எனது ஐ.பி.எஸ். பணியை மேற்கொண்டேன். ஆனால், ஓய்வு பெற்ற பிறகு பல பிரச்சனைகளை தூரத்தில் நின்று பார்க்க துவங்கினேன். அப்போதுதான் மக்களுக்கான சேவை செய்வதற்கு இதுதான் சிறந்த வழி என்று தீர்மானித்தேன். கட்சியின் கொள்கையில் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார். இதையும் படியுங்கள் : தொடரும் நீட் தேர்வு மரணங்கள் : “தேர்வை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வெற்று அறிவிப்புதான் காரணம்…” - கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி! அதேபோல், ஸ்ரீலேகா பா.ஜ.கவில் இணைந்தது குறித்து பேசிய மாநிலத் தலைவர் சுரேந்தரன், “ஸ்ரீலேகா மாநில மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவர் காவல்துறையில் பல சீர்திருத்தங்களை வழிநடத்திய ஒரு துணிச்சலான அதிகாரி. இவர், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல முடிவுகளை எடுத்தவர். அதுமட்டுமின்றி காவல்துறையில் பெண்களின் பங்கை உறுதிப்படுத்தினார். இவற்றையெல்லாம் தாண்டி அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர். அவரது பல வருட அனுபவமும் அவரது தலைமையும் பாஜகவை உயர்த்தும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்துவந்தார். பிறகு 2019ம் ஆண்டு தனது பணியில் இருந்து விலகிய அவர், 2020ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அதன்பிறகு 2021ம் ஆண்டு தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.