ENTERTAINMENT

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது மான நஷ்ட வழக்கு - நடிகர் விஷால் அதிரடி.. மோதலின் பின்னணி என்ன?

நடிகர் விஷால் நடிக்கும் படங்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஷால், அவ்வப்போது கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக இருக்கும் விஷால், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியை பொறுப்பற்ற முறையில் கையாண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் தனி குழு அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விஷால் தலைவராக இருந்தபோது, 12 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த இழப்பு குறித்து விஷால் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஷால் நடிக்கும் புதிய படங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி விஷால் நடிப்பில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், சங்கத்திடம் ஆலோசனை செய்த பிறகே, பட வேலைகளை தொடங்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிக்கையின் காரணமாக விஷால் நடிக்கும் புதிய படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமா வட்டாரத்தில் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனிடையே தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக விஷால் தரப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2019ம் ஆண்டு வரை விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்தனர். அப்போது, தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நலிந்த உறுப்பினர்களின் நலத்திட்டங்களுக்காக, சங்கத்தின் வைப்பு நிதியை செயற்குழு மற்றும் நிர்வாகக் குழுக்களிடம் அனுமதி பெற்றே பயன்படுத்தப்பட்டதாக விஷால் தரப்பு தெரிவித்துள்ளது. அந்தத் தொகை, பொருளாதார ரீதியாக நலிந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் பென்ஷன் ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வைப்புத் தொகையை பயன்படுத்தலாம் என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, சங்க நிர்வாகிகள் உட்பட அனைவரும் கையெழுத்திட்ட பிறகே வைப்பு நிதியை எடுத்து நலத்திட்டங்களுக்கு செலவிடப்பட்டது என்றும், அதுவும் வங்கி கணக்குகள் மூலமாகவே உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது என்றும் விஷால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: ஸ்கூலுக்கு போக நோ சொன்ன பேரன்.. ரஜினிகாந்த் என்ன செய்தார் தெரியுமா..? ஷாக் ஆன குட்டிஸ்..! தற்போது செயலாளராக இருக்கும் கதிரேசன் அப்போதும் செயலாளராக இருந்தார். அவரும் வைப்பு நிதியை செலவிடும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார் என்றும், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் விஷால் தரப்பி கேள்வி எழுப்பியுள்ளது. நடந்த சம்பவங்கள் இப்படி இருக்கையில் தனிப்பட்ட முறையில் விஷால் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் விஷால் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இருதரப்பினரும் மோதல் போக்கை கையில் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை செல்லுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.