COIMBATORE

11 நாள் டீ செலவுக்கு ₹27 லட்சம் செலவு... அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை மாநகராட்சி!

கோவை மாநகராட்சி கோவை , வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 76 லட்சம் ரூபாய் செலவானதாகவும், அதில் உணவு, தேநீருக்காக 27 லட்சம் ரூபாய் செலவானதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் மேயர் கல்பனா ராஜினாமா செய்த நிலையில், துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீயை அணைப்பதற்கான செலவுகளுக்கு ஒப்புதல் அளித்த தீர்மானம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு தரம்பிரிக்கும் பணி நடைபெறுகிறது. 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கில் நாள்தோறும் சுமார் 800 டன் அளவிலான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு, கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கட்டுக்கடங்காமல் தீ பரவியது. இதனால், 12 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு ஏப்ரல் 17-ஆம் தேதி தீ அணைக்கப்பட்டது. இந்த தீயை அணைக்க முக்கால் கோடி ரூபாய் செலவானதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானத்தில், தீயணைப்புத் துறை வீரர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், அலுவலர்கள், காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு, டீ, காபி, குளிர்பானம் மற்றும் பழங்கள் வாங்கிக் கொடுத்தற்காக ₹27,51,678 செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாநகராட்சி வசம் போதுமான வாகனங்கள் இல்லாததால் தனியாரிடம் வாடகைக்கு வாங்கப்பட்டதாகவும், பொக்லைன் மற்றும் லாரி வாடகைக்காக ₹23, 48000, தண்ணீர் லாரி வாடகைக்காக ₹5 லட்சம், அவற்றுக்கு டீசல், கிரீஸ், ஆயில் உள்ளிட்டவை வழங்க 18 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயும் செலவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு முகக்கவசம் வழங்க ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாயும், பிரத்யேக காலணிகள் வழங்க 52 ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மொத்தமாக குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிக்காக மட்டும் 76 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு, கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதலும் வழங்கப்பட்டது. தீயை அணைக்க 76 லட்சம் செலவானதாகவும், அதில் குறிப்பாக உணவு, தேநீர் செலவுக்கு 27 லட்சம் ரூபாய் செலவானதாகவும் கூறியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.