NILGIRIS

நீலகிரியில் தொடர் கனமழையால் ரெட் அலர்ட்... சுற்றுலாத் தலங்களை மூடியதால் பயணிகள் ஏமாற்றம்..

நீலகிரியில் கனமழை நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று காலை முதல் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. நேற்று வரை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் அதிக கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வருவதால் ஊட்டி பர்ன்ஹில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சாலையைச் சீரமைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் அதிக கன மழை பொழிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தொட்டபெட்டா காட்சி முனை மற்றும் பைன் பாரஸ்ட் தற்காலிகமாக மூடுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் அவலாஞ்சி காட்சி முனையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் மழை பொழிவின் காரணமாக அவர்கள் தங்கி உள்ள விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாகச் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தேவாலாவில் 103 மி.மீ, அவலாஞ்சியில் 93 மி.மீ, அப்பர் பவானியில் 53 மி.மீ, கூடலூர் மற்றும் நடுவட்டத்தில் 49 மி.மீ, பந்தலூரில் 47 மி.மீ மழைப் பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தமாகக் கடந்த 24 மணி நேரத்தில் 735.30 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. இதனால் அன்றாட வேலைக்குச் செல்பவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழையினால் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.